Apr 13, 2013

சாத்தூரில் கார்பைடு கல்லில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்


சாத்தூர், ஏப். 13:
சாத்தூர் பழக்கடை குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர் சோதனையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாத்தூருக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. சாத்தூர் பகுதியில் உள்ள குடோன்களில் கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கரநாராயணன், முருகேசன், வெங்கடேசன் ஆகியோர் சாத்தூர் பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மெயின் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பேட்டை பகுதிகளில் உள்ள மொத்த கடைகளில் சோதனை நடத்தினர். இதில் பேட்டை பகுதியில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை பினாயில் ஊற்றியும் உப்புக்கல் போட்டும் அழித்தனர். தொடர்ந்து சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளிலும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாக்டர் கவிக்குமார் கூறுகையில், மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றோம். முதல் கட்ட சோதனையில் 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மாம்பழங்களை கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment