Apr 11, 2013

பண்ணையாளர்கள் குப்பையில் வீசிய இறந்த கோழிகளை எடுத்து வந்து சில்லி சிக்கன் தயாரித்தவர் கைது



திருப்பூர், ஏப்.11:
திருப்பூரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையில் குப்பையில் வீசப்பட்ட இறந்த கோழிகளை எடுத்துவந்து சில்லி சிக்கன் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். 200 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் பூம்புகார் நகர் பகுதியில் இறந்த கோழிகளை சில்லி சிக்கனாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நிலைய அலுவலர் விஜய், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தங்கவேலு, மாநகர் நல அலுவலர் செல்வக்குமார், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் முருகன், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு ஒருவர் மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த இறந்த கோழிகளின் இறைச்சிகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள், அவரிடமிருந்து சுமார் 200 கிலோ கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அந்த நபர் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி (55) என்பதும், திருப்பூர் பூம்புகார் நகரில் வசித்துக்கொண்டு, பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் அருகே தள்ளுவண்டியில், சில்லி சிக்கன் வியாபாரம் செய்து வருவதும், இதற்காக பல்லடம், பொங்கலுர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் மற்றும் பல்வேறு காரணங்களால் இறந்து, குப்பை யில் வீசியெறியப்படும் கோழிகளை எடுத்து வந்து, சில்லி சிக்கன் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோழிப் பண்ணைகளில் நோயால் பாதிக்கப்பட்டு, வீசியெறியப்படும் இறந்த கோழிகளை இறைச்சியாக திருப்பூரில் சாலையோர சில்லி சிக்கன் கடைகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், கலெக்டர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில், பண்ணைகளில் நோய்வாய் பட்டு இறக்கும் கோழிகளை, மண்ணில் சுண்ணாம்பு போட்டு புதை க்க வேண்டும் என அறிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் இதை பின்பற்றாமல் இறக்கும் கோழிகளை வீசியெறிந்து விடுகின்றனர். இதுபோன்று செயல்படும் பண்ணையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment