Apr 6, 2013

ரூ.1.37 லட்சம் போலி குளிர்பானங்கள் பறிமுதல்

சென்னையில் 3 நாள்களில் ரூ. 1.37 லட்சம் மதிப்பிலான போலி குளிர் பானங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கைப்பற்றினர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் குளிர்ச்சியான பானங்களை பொதுமக்கள் அதிகளவில் அருந்துகின்றனர். இந்த நிலையில் பல இடங்களில் போலியான குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இந்த நிலையில் சென்னையில் 3 நாள்களில் ரூ. 1.37 லட்சம் மதிப்பிலான போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியது: கோடை காலத்தில் போலி குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் அதிகளவில் விற்கப்படுகின்றன என்று புகார்கள் வந்தன. இதனையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கும், கடைக்காரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தரமற்ற மற்றும் ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்ட வண்ணப் பொடிகள், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரித்த இடத்தின் முகவரி ஆகிய தகவல்கள் இல்லாத குளிர்பானங்கள், குளிர்பான பொடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பெரிய குளிர்பானங்களின் பாட்டில்களில் விற்கப்பட்ட சோடா ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெற்றது. தேனாம்பேட்டை மற்றும் தியாகராய நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வில் ரூ. 25,000 மதிப்பிலான போலி குளிர்பானங்களும், வியாழக்கிழமை பாரிமுனை பகுதியில் நடைபெற்ற சோதனையில் ரூ. 40,000 ஆயிரம் மதிப்பிலான போலி குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேளச்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையில் ரூ. 72,000 மதிப்புள்ள போலி குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் 15 உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment