Jan 13, 2013

Dinakaran

போலியான மற்றும் கலப்பட உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களில் முழுமையான முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடுவதில்லை. முகவரிக்கான பகுதியில் ஏதாவது ஒரு நகரத்தின் பெயரை மட்டுமே பிரிண்ட் செய்கின்றனர். இதனால் உற்பத்தியாளர்கள் பலர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்கி இருப்புவைப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது மட்டுமே தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மனித வாழ்வின் அன்றாட அங்கம் என்று கருதும் அளவிற்கு டீ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. டீ குடிக்கவில்லையென்றால் எதையோ இழந்தது போன்ற மனநிலைக்கு பலரும் செல்வது இயல்பாக மாறியுள்ளது. வேலை பளு, சோர்வு, பசி போன்ற காலங்களில் பலரும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறைந்த விலையில் கிடைக்கும் உற்சாக பானமான டீயை பெரும் செல்வந்தர்களில் துவங்கி, தினக்கூலி தொழிலாளர்கள் வரை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
நுகர்வு அதிகமாக உள்ளதால் போலியான டீ தூள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக போலி டீ தூள் விற்பனை நடக்கிறது. சாலையோர டீ கடைகள், சிறிய வணிக நிறுவனங்களில் இந்த டீ தூளை அதிகளவில் சந்தைப்படுத்துகின்றனர். பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்கப்படும் இந்த டீ தூளை வாங்கி, தொடர்ந்து பயன்படுத்துவோர் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். போலி டீ தூளை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியும். நல்ல டீ தூளை சுடு தண்ணீரில் போட்டால் மட்டுமே தண்ணீர் நிறம் மாறும். ஆனால் போலியான டீ தூளை சாதாரண தண்ணீரில் போட்டாலே பிரவுன் கலராக தண்ணீர் மாறிவிடும்.
முந்திரி தோல், மரத்தூள், புளியங்கொட்டை போன்றவற்றை தூளாக மாற்றி, அதில் துணிக்கு பயன்படுத்தும் சாயப்பொடியை கலந்து டீ தூள் என்று விற்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்த முறையில் தயாரிக்கப்படும் டீ தூளை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு வயிற்று புண்ணில் துவங்கி, கேன்சர் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. கல்லீரலை பாதித்து பல்வேறு நோய்கள் தாக்குவதற்கு வழிவகுக்கிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறியதாவது:
தங்களை நாடும் நுகர்வோருக்கு தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பதில் வியாபாரிகள் உறுதியாக இருக்க வேண்டும். மக்களை பாதிக்கும் உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. டீ கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் டீ தூளை வாங்கும் போது பேக்கிங்கை கவனமாக பார்க்க வேண்டும். வியாபாரிகள் தாங்கள் வாங்கும் டீ தூளுக்கு கண்டிப்பாக பில் வாங்க வேண்டும். இந்த நடைமுறை மூலம் போலி பொருட்கள் சந்தைக்கு வருவதை தடுக்க முடியும். நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருளின் விபரங்களை பேக்கிங்கில் தெளிவாக குறிப்பிட வேண்டும். உற்பத்தியாளர்கள் முழுமையான முகவரி, தொலைபேசி எண், தயாரிப்பு தேதி, பெஸ்ட் பிபோர் தேதி, உற்பத்தி பொருளில் என்னென்ன மூலப்பொருட்கள் கலந்துள்ளது, வெஜிடேரியன், நான் வெஜிட்டேரியன் குறித்த தகவலுக்கான சிம்பல், உணவில் உள்ள கலோரி உள்ளிட்ட சத்து விபரங்கள் ஆகியவற்றை தெளிவாக பிரின்ட் செய்திருக்க வேண்டும். இந்த தகவல் இல்லாத உணவு பொருட்கள் போலியானவை, கலப்படமானவை என்பதை பொதுமக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
போலியான மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி, தரம் குறைந்த பொருட்களை சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கேன்சருக்கு வழி வகுக்கும்
பண ஆசை வேண்டாம்
தரமான உணவு பொருட்களோடு ஒப்பிடும்போது, போலியான மற்றும் தரம் குறைந்த உணவு வகைகளை விற்பனை செய்வதால் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. இதற்கு ஆசைப்பட்டு வியாபாரிகள் சிலர் இந்த உணவு பொருட்களை சந்தைப்படுத்துகின்றனர். பில் இல்லாமல் வாங்கினால் விலை குறையும் என்று கருதி வியாபாரிகள் பலரும் போலியான உணவுப்பொருள் என்பது தெரியாமலேயே கொள்முதல் செய்கின்றனர். இதுபோன்ற நடைமுறைகளால் அதிகாரிகள் சோதனை நடத்தும் போது வியாபாரிகள் மட்டுமே தண்டனைக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது. கூடுதல் ஆதாயத்துக்கு வியாபாரிகள் ஆசைப்படாமல் இருந்தாலே போலியான பொருட்கள் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
போலி டீ தூள் நடவடிக்கையில் இடைவெளி
தரம் குறைந்த, கலப்படம் மற்றும் போலியான உணவு பொருட்களை தயாரிப்போரை அதிகாரிகள் பிடித்து, பொருட்களை பரிமுதல் செய்த போதும், அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே உள்ளது. பறிமுதல் செய்த உணவு பொருட்களை பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதன் முடிவு 15 நாட்களுக்கு பின்னர் வருகிறது. இந்த முடிவின் அடிப்படையில் சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவு பொருளை விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிகள் மீது கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடைமுறைகளுக்கு இடையே தரம் குறைந்த உணவு பொருள் தயாரிப்பாளர்கள் தங்களது உற்பத்தி இயந்திரங்களுடன் தலைமறைவாகி, வேறு பகுதியில் உற்பத்தியை துவங்குகின்றனர்.
போலியான மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி, தரம் குறைந்த பொருட்களை சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment