Oct 21, 2012

PAPER NEWS

மக்கள் பயன்படுத்தும் பாலில் 68 சதவீதம் கலப்படம் : மத்திய அரசு தகவல்

புதுடில்லி:பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், 68 சதவீதம், கலப்படமாக இருப்பதாக, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

உத்தரகண்ட்டை சேர்ந்த, சுவாமி அச்சியுதானந்த் தீர்த் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில், கலப்படம் செய்யப்படுகிறது. செயற்கை முறையிலும் பால் தயாரிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பால் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பல முக்கியமான விஷயங்கள் தெரியவந்தன.இதன்படி, நகர்ப்புறங்களில், தற்போது மக்கள் பயன்படுத்தும் பாலில், 60 சதவீத பால், கலப்படமாக உள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ள தர விதிமுறைகளை, பூர்த்தி செய்யும் வகையில், இந்த பால் இல்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில மாதிரி பால்களில், குளுகோஸ், தண்ணீர் உள்ளிட்டவை, சேர்க்கப்படுகின்றன. பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக, டிடெர்ஜென்ட் பவுடர்கள் சேர்க்கப்படுகின்றன.இவ்வாறு, மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment