Aug 4, 2012

உணவு பாதுகாப்பு விதிமுறைகள் தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளை அமல்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த, பல விதிமுறைகளை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வகுத்தது. ஓட்டல், உணவு விடுதிகள் என, உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், உரிய அதிகாரியிடம் உரிமம் பெற வேண்டும், உணவுப் பொருட்களை பேக்கிங் செய்து லேபிள் ஒட்டி விற்க வேண்டும், உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், பரிசோதனைக் கூடங்களில் உணவு மாதிரியை சோதிக்க வேண்டும் என, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன.

தடை
இந்த விதிமுறைகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு உணவு விற்பனையாளர்கள் நலச் சங்கம் மனு தாக்கல் செய்தது. விதிமுறைகளுக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. மனுக்களை விசாரித்த ஐகோர்ட், விதிமுறைகளை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. தடை உத்தரவை நீக்கக் கோரி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியம் விசாரித்தார். ஆணையம் வகுத்த விதிமுறைகள், பார்லிமென்டின் இரு சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என, ஆணையத்தின் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே, 1955ம் ஆண்டு முதல் இருக்கும் விதிமுறைகளை தான் இந்தப் புதிய விதிமுறைகளிலும் கையாண்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், விதிமுறைகளை அமல்படுத்துவதை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வருகிறது. இந்தச் சட்ட விதிகளை அமல்படுத்தாததற்காகவும், விதிமுறைகளை அறிவிக்காததற்காகவும், ஒரு கட்டத்தில் அதிகாரிகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது.

சட்டப் பிரிவுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த உத்தரவுகள், சுப்ரீம் கோர்ட் உத்தரவினால் தான் வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு தடை விதிக்கக் கூடாது. சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என, ஒரு கோர்ட் கேள்வி கேட்கும் போது, சட்டத்துக்கு மற்றொரு கோர்ட் தடை விதிப்பது என்பது முரண்பாடாக இருக்கும். எனவே, இடைக்காலத் தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தடை நீக்கப்படுகிறது. இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எல்லாம், வழக்கின் இறுதி விசாரணையின் போது முன்வைக்கப்படும் வாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

சக்தி மசாலா நிறுவனம் மற்றும் விவசாயப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டப் பிரிவுகளை எதிர்த்து, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்தில் குறிப்பிட்ட பிரிவு 31(7) க்கு மட்டும் ஐகோர்ட் தடை விதித்திருந்தது. உணவு வர்த்தகத்தில் உள்ளவர்கள் உரிமம் பெற வேண்டும் மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும் என, இந்தப் பிரிவு வலியுறுத்துகிறது.

இந்த தடையையும் நீக்கக் கோரி, ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியன், "இது ஒன்றும் புதிய பிரிவு அல்ல. வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு உரிமம் பெற வேண்டும் என்பது, 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. எனவே, இந்தப் பிரிவுக்கு தடை விதிக்க வேண்டியதில்லை. தடை நீக்கப்படுகிறது' என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment