May 7, 2012

DINAMALAR NEWS

கொடிகட்டி பறக்குது நொறுக்குத் தீனி விற்பனை : குழந்தைகளைக் குண்டாக்கும் அபாயம்

ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வெளிநாட்டு உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் விற்பனை, தமிழகத்தில், கொடிகட்டி பறந்து வருகிறது. குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கும் இதுபோன்ற உணவுகளைக் கட்டுப்படுத்த, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்பெல்லாம், ஓய்வு நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் வெளியிடங்களுக்கு செல்பவர்கள், தங்கள் குழந்தைகளை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, இட்லி, தோசை, சாம்பார், வடை என்று வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு திரும்புவர். தமிழக கலாசார உணவுகளான இவற்றை உட்கொள்வதால் அதிக பாதிப்பு ஏற்படாது. ஆனால், தற்போது, தமிழக உணவுகளை சாப்பிடும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி விட்டது.

அதற்கு பதிலாக, "டிரான்ஸ்பேட்' எனப்படும் கொழுப்பு மிகுந்த, வெளிநாட்டு பாஸ்ட்-புட் உணவுகளையே, குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றனர். இதேபோல, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உருளைக் கிழங்கு உணவு உட்பட, பல்வேறு நொறுக்குத் தீனிகளையும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். இதற்கு "லேஸ்' போன்ற வறுவல் அதிக அளவில் விற்பனையாகின்றன. பெரிய வர்த்தக வளாகங்களில் மட்டுமின்றி ஆங்காங்கே தனியாகவும், பல்பொருள் அங்காடிகளின் வெளியே பெட்டிக் கடைகள் போலவும் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் தயாரிப்பது, பெரிய நிறுவனங்கள் மூலம் மட்டுமின்றி குடிசைத் தொழில்கள் போலவும், மாநிலம் முழுவதும் பெருகிவிட்டன.

நோய்கள்:பெட்டிக் கடைகளிலும், இதுபோன்ற நொறுக்குத் தீனிகள் பல்வேறு வண்ணங்களில், சரம் சரமாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு தொங்க விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் பருமன் அடைதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், உடலுக்கு தீங்கு செய்யும் கொழுப்பு அதிகரிப்பு ஏற்படுவதாக, உலக நாடுகளின் ஆய்வறிக்கைகளில் கூறப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பதால், சிறு வயதிலேயே, "ஒபிசிட்டி' என்ற உடல் பருமன் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, சுறுசுறுப்புத் தன்மையை குழந்தைகள் இழந்து விடுகின்றனர். உணவு கலப்பட தடுப்புச் சட்டப்படி, இதுபோன்று உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, சுகாதார ஆய்வாளர்கள் சென்று ஆய்வு செய்து தடை விதிக்கலாம். ஆனால், இத் தொழில் அடைந்த அபரிமித வளர்ச்சியை வரன்முறைப்படுத்துவது எளிதல்ல. அதற்கென தனித் திட்டம் தேவை . இனி வரும் காலத்தில் குட்கா போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட தடை போல இவற்றிற்கும் தடை விதிக்கலாம்.

ஆனால், சென்னையில் உள்ள கலாசார அடிப்படையில் நடத்தப்படும் சில நல்ல பள்ளிகளில், முதல்வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம், வறுவல் மற்றும் பர்கர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இது போன்ற உணவுகளை ஆய்வு செய்வதற்காக, சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில், தனிப்படைகள் அமைப்பதுடன், இதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தேவை.

தடுப்பது பிரமாண்டமான பணி : மத்திய அரசின் முடிவுப்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திற்காக தனியாக கமிஷனரகத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு, கடந்த 2011ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு சோதனைக் கூடங்களை தரம் உயர்த்துவதற்காக, 50 கோடி ரூபாயும் அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் தொடர்ந்து, பல மாதங்களாக கிடப்பிலேயே உள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்தினால், அதன் மூலம் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தும் உணவுகளைக் கண்டறிந்து தடுக்க முடியும்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், "நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவில், இரண்டு சதவீத, "டிரான்ஸ்பேட்' என்ற கொழுப்புசத்து இருந்தாலே அதிகம். ஆனால், வெளிநாட்டு பாஸ்ட்புட் உணவுகளிலும், பாக்கெட் நொறுக்குத் தீனிகளிலும் அளவுக்கு அதிகமான," டிரான்ஸ்பேட் உள்ளது. இதுவே, உடல் எடையை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதுபோன்ற வெளிநாட்டு கவர்ச்சி உணவுகளை உட்கொள்வதற்கு பெரியவர்கள், பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே, குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. சிறுவயதிலேயே தரமான உணவு சாப்பிடும் பழக்கத்தை, குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment