May 29, 2012

பீர், ஒயின், விஸ்கியில் சாராயம் எவ்வளவு?நிர்ணயிக்க அமலாகிறது புதிய திட்டம்

புதுடில்லி:பீர், ஒயின், விஸ்கி உள்ளிட்ட மது வகைகளில், சாராயம் (ஆல்கஹால்) எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க, புது நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

வெளிநாடுகளில் எல்லாம், மது வகைகளில் சாராயத்தின் அளவு, எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை, அதற்காக நியமிக்கப்பட்ட சில அமைப்புகள் முடிவு செய்கின்றன.ஆனால், இந்தியாவில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் இதுவரை இல்லை. தற்போது, விஸ்கி, ரம், ஜின் மற்றும் வோட்கா போன்ற மது வகைகளில், 45.5 சதவீதமும், பீரில் 8 சதவீதமும் சாராயம் இருக்கலாம் என்ற நடைமுறை உள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டம்:"உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம்-2006' என்ற சட்டம், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் கீழ், மது வகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.மனிதர்களால் உட்கொள்ளப்படும் அனைத்தும், உணவு வகைகளே என, இந்த ஆணையம் கூறி வருகிறது. ஆனால், இதற்கு, மதுபான உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது.இந்த சட்டம் மற்றும் ஆணையத்தின் கீழ், மது வகைகளை கொண்டு வரக் கூடாது என்றும், ஏற்கனவே, இது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், மது வகைகளில், சாராயத்தின் அளவை நிர்ணயம் செய்ய, இந்த ஆணையத்துக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறி வருகிறது.

வழக்குகள்:இந்த ஆணையத்தை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்திலும், ஜபல்பூர் உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.ஆனால், பீர் உள்ளிட்ட மது வகைகளில், சாராயத்தின் அளவை நிர்ணயம் செய்யும் முடிவை, மறு பரிசீலனை செய்ய ஆணையம் மறுத்து விட்டது. மேலும், இதற்கான வரைவு திட்டத்தையும் தயார் செய்துள்ளது. இதற்கு, ஆணையத்தின் அறிவியல் கமிட்டியும் ஒப்புதல் அளித்துள்ளது.ஆணையத்தின் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அப்போது, இந்த திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு, ஜூலை 1ம் தேதி, அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதன்பின், பீர், ஒயின் உள்ளிட்ட பல வகையான மதுபானங்களில், சாராயத்தின் அளவு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, அமலுக்கு கொண்டு வரப்படும்.

No comments:

Post a Comment