தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்துத் தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. காங்கேயம் பகுதியில் 70 வயது விவசாயி இந்த நோய்க்கு பலியான செய்தியும், சென்னையில் மேலும் 2 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நோயால் மேலும் 12 பேர் (சென்னையில் 5 பேரும் கோவையில் 7 பேரும்) பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் அளவுக்கு ஏதும் நடந்துவிடவில்லை என்றாலும், இந்த நோய் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் தனி வார்டுகளை அமைத்துள்ளது. "டாமிபுளு' மாத்திரைகளை அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொண்டுசேர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அரசு செயலர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், இந்த நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமே தவிர, களத்தில் இறங்கி இதைச் செயலாக்கும் பொறுப்பு அரசு மருத்துவமனை மருத்துவர்களைச் சேர்ந்தது. தனி வார்டுகளை அமைப்பதும், டாமிபுளு மாத்திரைகளைக் கையிருப்பில் வைத்திருப்பதும் அரசின் நடவடிக்கையாக இருந்தாலும், இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்பது உறுதியாகும்வரை, ஒரு மருத்துவர் 24 மணி நேரமும் இத்தகைய தனி வார்டுகளில் இருக்கும்படி செய்வது அவசியம்.இன்றைய காலகட்டத்தில், காய்ச்சல் என்றவுடன் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. காய்ச்சல் தீவிரமடையும் முன்பாக அது பன்றிக்காய்ச்சல்தான் என்பதை உறுதி செய்து, அரசுத் தலைமை மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ÷தமிழகத்தில் சென்றமுறை இதே சூழ்நிலை உருவான நேரத்தில், பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவென தனியார் மருத்துவமனைகள் சிலவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. கோவையில் அவ்வாறு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளையும் அழைத்துப் பேசி, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடச் செய்யவேண்டும்.ஒரு நோயாளி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் பன்றிக் காய்ச்சலை உறுதிப்படுத்தும் சோதனைகள் கிங் இன்ஸ்டிடியூட்டில் செய்யப்படும் நிலைதான் இன்றளவும் உள்ளது. இச்சோதனை முடிவுகள் உடனுக்குடன், போர்க்கால அடிப்படையில் தொடர்புடைய மருத்துவமனைக்குத் தெரிவிக்கப்படுவதை அரசு உறுதி செய்வதும் அவசியம்.நோய் பரவுவது கட்டுப்படவில்லை என்றால், அடுத்த கட்டமாகத் தடுப்பு ஊசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். நோய் பரவத் தொடங்கியதும் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது மட்டும் சுகாதாரத் துறையின் வேலை அல்ல; நோய் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் அந்தத் துறையைச் சார்ந்ததுதான்.பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், சிக்குன்குன்யா என எல்லா நோய்களும் பொதுஇடங்களில் நிலவும் சுகாதாரக் கேட்டினால்தான் அதிகம் பரவுகின்றன. இதில் குடிநீர், சுகாதாரமற்ற உணவுகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தாமல், நோய் பரவுதலை மட்டுமே கட்டுப்படுத்தவும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்வதும் எந்தவித பயனையும் தராது.÷பிளாஸ்டிக் உறைகளிலும், பாட்டில்களிலும் விற்பனை செய்யப்படும் குடிநீர் ஒரு மிகப்பெரிய வணிகமாகி விட்டிருக்கும் நிலைமை. மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, குறைந்தபட்சம் ரூ.2 விலை கொடுத்து தண்ணீர் பாக்கெட் வாங்கிக் குடிக்கிறார்கள். ஆனால் அது தரமாக இருக்கின்றதா என்பதை அடிக்கடி சோதனையிட்டு உறுதிப்படுத்த வேண்டியது சுகாதாரத் துறையின் கடமை. சுகாதாரம் குறித்து மக்களுக்குத்தான் விழிப்புணர்வு வேண்டும் என்று பிரச்னையை திசை திருப்பிவிட முடியாது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எல்லாரும் குடிப்பதற்குப் பணம் கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்குகிறார்கள். கையைக் கழுவ மட்டும்தான் ரயில்பெட்டிக் குழாயில் வரும் நீரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், எத்தனைப் பயணிகளுக்குத் தெரியும், அதே குழாய் தண்ணீரைத்தான் கெட்டிச் சட்னியைக் கரைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதும், தயிர்வடைக்காக வடைகளை ஊறப்போடும் தண்ணீர், ரயில்பெட்டியின் மேற்கூரையில் உள்ள அதே தண்ணீர்தான் என்பதும்! ரயில் பான்டிரி நிலைமையே இதுவென்றால், தெருவோர தள்ளுவண்டிக் கடைகளைப் பற்றி என்ன சொல்வது?மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் சுகாதாரத் துறை என்று ஒன்று இயங்குகிறதே தவிர, அதற்கு எந்தவித அதிகாரமும் இல்லாமல் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாற்றப்பட்டுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உணவகங்களைச் சோதனையிட முடியுமே தவிர, முறையாக செயல்படாவிட்டால் அபராதம் விதிக்கவோ, உரிமத்தை ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை என்கிற அவலநிலை. உணவக அதிபர்களின் நன்மைக்காக செயல்படும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமாக சுகாதாரத் துறையை ஒப்புக்குச் சப்பாணியாக்கி வைத்திருப்பதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாக இல்லை.தெருவோரக் கடைகள் காளான்களாக பெரிய, சிறிய நகரங்களில் நாளும் பொழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தரமற்ற, எந்தவித சுகாதார முறைகளையும் பின்பற்றாத இந்தத் தெருவோரக் கடைகள் மாமிச உணவுகளையும் தயாரிப்பதால் தொற்று நோய்கள் பரவுவதற்கான ஊற்றுக் கண்களாக செயல்படுகின்றன என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்தவோ, முறைப்படுத்தவோ எந்தவித முயற்சிகளும் எடுப்பதில்லை என்கிற அவலம். காரணம், காவல் துறையினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் நிரந்தர "மாமூல்' வருமானத்துக்கு அவை உதவுகின்றன என்பதுதான்.நோய் தீவிரமாகப் பரவும்போது அதைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் சுகாதாரத் துறை, நோய் தோன்றக் காரணமாக இருக்கும் விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. நோய் வந்தபின் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் நோய் வராமலே தடுப்பதுதான் செலவையும் வலியையும் பதற்றத்தையும் தவிர்க்கும்.
No comments:
Post a Comment